முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பான குறிப்பு

மாண்பு மிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் காலைச் சிற்றுண்டி வழங்குதல் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் சட்டப் பேரவை விதி எண்,110ன் கீழ் 07.05.2022 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 15.09.2022 அன்று மதுரை மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வெற்றிகரமாக துவக்கி வைக்கப்பட்டது.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-NFHS-5ன் படி இரத்த சோகை அதிகமாக காணப்பட்ட மாவட்டங்கள், தொலைதூர கிராமப் பகுதிகளில் SBGF (மாநில சமநிலை வளர்ச்சி நிதி) தரவுகளின் படியும் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியின் அடிப்படையிலும் மையங்கள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 1545 பள்ளிகளில் உள்ள 1,14,095 (ஒரு லட்சத்து பதிநான்காயிரத்து தொண்ணுற்று ஐந்து ) தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்திற்கான பல்வேறு வகையான உணவு வகைகள் பின்வருமாறு:-

வ.எண்

வாரத்தில் நாட்கள்

உணவு பட்டியல்

உணவு பட்டியல் விவரங்கள்

1

திங்கள்கிழமை

உப்புமா வகை

ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை உப்புமா போன்ற உப்புமா வகைகள் காய்கறி சாம்பாருடனும்,

2

செவ்வாய் கிழமை

கிச்சடி வகை

ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை காய்கறி கிச்சடி வகைகளும்,

3

புதன்கிழமை

பொங்கல் வகை

ரவா பொங்கல் மற்றும் வெண்பொங்கல் காய்கறி சாம்பாருடனும்,

4

வியாழக்கிழமை

உப்புமா வகை

சேமியா உப்புமா வகை , காய்கறி சாம்பாருடனும்,

5

வெள்ளிக்கிழமை

இனிப்பு வகை

ஏதாவதொரு கிச்சடி வகையுடன் இனிப்பு வகையும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு நாளைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் ஆகும். ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கலாம்.

காலைச் சிற்றுண்டி வழங்குவதால் ஒரு குழந்தைக்கு 293.40 கி.கலோரி ஆற்றல், புரதம் 9.85 கிராம், கொழுப்பு 5.91 கிராம், இரும்பு சத்து 20.41 மி.கிராம் மற்றும் சுண்ணாம்பு சத்து 1.64 மி.கிராம் கூடுதலாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.